குறளும் மனுவும்
இந்த வருடம், என் பிறந்தப் பரிசாக நண்பர் ஒருவர் கொடுத்த நூல் திரு.திருலோக
சீதாராம் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். திருலோக சீதாராம் மிக மென்மையாக தன் மொழிப் பெயர்ப்பை செய்திருக்கிறார் என்பது வலையுலகில் காணப்படும் மூலத்தைப்1 படிப்பவர்களுக்குப் புரியும். தற்போது தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வோர் தூக்கிப் பிடிக்கும், இந்து தர்மம் சாற்றும் நூல் இதுதான். மனுதர்மத்தைப் பின்பற்றி தான் திருக்குறள் எழுந்தது என்று கூறுவோரும் இருக்கிறார்கள்2.
திருக்குறளில் கூறப்படும் சில கருத்துக்கள் மனுதர்மத்தில் கூறப்பட்டாலும், அவைகள்
பொதுவான கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, குறள் மனுதர்மத்தின்
தழுவல் என்று கூறமுடியாது. அப்படி கூறவேண்டுவதற்கு அடிப்படைக் கருத்துக்களில்
அவைகள் ஒன்றுப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்க்க வேண்டும். அகிம்சையே
(கொல்லாமை நெறி) குறளின் அடிநாதம். கொல்லாமையைத் தலையாய அறமாக குறள் போற்றுகிறது. மேலும், கொல்லாமையின் இயல்பான தன்மை புலால் மறுத்தல்.
அவற்றையும் குறள் ஏற்றிக் கூறுகிறது. அவற்றை மனுதர்மம் போற்றுகிறதா? என்றும் ஆராயவேண்டும். அப்படி பார்த்தோமானால், குறள் கூறும் அறமும், மனுதர்மம் கூறும்
அறமும் வேறு வேறாகயிருப்பதை யாரும் எளிதில் உள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குப் பார்ப்போம்!
”வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டே நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும்போது அது பசுவதையாகாது3.”
ஆனால் குறளோ,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை4
என்றும்,
‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று4”
என்று அழுத்தம் திருத்தமாகச் சாற்றுகிறது!!
இப்படி நிறைய முரண்பாடுகள் இருநூல்களுக்குள்ளும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை
எடுத்துக் காட்டின் ஒரு நூல் அளவு விரியும் என்பதால் இன்னுமொரு அடிப்படை
முரண்ப்பாட்டை மட்டும் பார்ப்போம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
மனுதர்மத்தில்5,
”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால்
வருணத்தையும் வேதஞானம், புவிரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற
கட்டுப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம்,
தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர்.” என்று
கூறப்படுகிறது.
அஃதாவது,
பிரம்ம ஸ்வரூபியாக நின்றவரான பரம்பொருள், தலையில் இருந்து பிரம்மர்களும்
(பிராமணர்கள்), தோளில் இருந்து க்ஷத்ரியர்களும், தொடையில் இருந்து
வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்றும்,
அவர்களுடைய தொழில்கள் முறையே, வேதம் ஓதுதல், குதிரை முதற்கொண்டு
அரசாட்சி முறைமை செய்தல், வாணிபம் செய்து பொருள் ஈட்டல், மற்ற
வர்ணத்தினோருக்கு ஏவல் புரிதல் ஆகிய தொழிகளை செய்யவேண்டும் என்று
மனுதர்மம் ஆணையிடுகிறது.
மேலும், பிறப்பால் எல்லா வருணத்தினோரும் ஒரே தன்மையினரல்லர் என்பது
விளக்கமாகும்.
ஆனால் சிரமண மதத்தின் வேதமாகக்6 கருதப்படும் திருக்குறளோ,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்7
உரை - மணக்குடவர்,
”எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய்
தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது
பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும்
கூறிற்று”.
அஃதாவது,
பிறப்பினால் எல்லோரும் சமம். அவரவர்கள் செய்யும் தொழிற்திறமையால்
தான் அவர்களுக்குள் வேற்றுமைக் காணப்படும், என்று குறள் அழுத்தம்
திருத்தமாக பகற்கிறது! இதனால் மனுதர்மம் சாற்றும் தர்மம் வேறு, திருக்குறள்
காட்டும் தர்மகோட்பாடுகள் வேறு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல்
விளங்கும். என்னை?
சமண இலக்கியங்களில் இருந்து அக்குறளுக்கு சான்றுகள் காட்டுவோம்.
“அன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிகனீயே
யென்றிரண்டில்லை கண்டாயிது நினதில்லமென்றான்8”
இதன் கருத்து,
”அன்றியும் அறமும் ஒன்றே அதனால் நான் அரசன், நீ வணிகன் என்று இரண்டு
பேதமில்லை. இது உனது இல்லம் என்பதாம். இதனால் சத்திரியன், வைசியன்
என்கிற ஜாதிபேதம் பிறப்பாலில்லை என்று திருத்தக்கத்தேவர் கூறுவதைக் காண்க”
மேலும்,
மேலே சொன்ன குறளை ஒற்றி எடுத்ததுபோல மகாபுராணம்9,
“மனுஷ்யஜாதி நாமகர்மத்தினுடைய உதயத்தினால் உண்டாகிய மனிதரெல்லோரும்
ஒரேவிதமாக விருந்தபோதிலும் ஒவ்வொருவரும் தம் தம் கைக்கொண்டு
அனுஷ்டித்து வந்த தொழில்களின் பேதத்தினால் பிரம்ம, க்ஷத்திரிய, வைஸ்ய,
சூத்திரரென்று நான்குவர்ணாஸ்ரமங்களாகப் பிரிந்தார்கள்”
என்றும்,
நல்ல குலமென்றுந் தீயகுலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லைத் – தொல்சிறப்பி
னாண்பொரு ளொன்றோ தவங்கல்வியாள்வினை
யென்றிவற்றா னாருங் குலம் 10
இதன் பொருள் – நல்ல குலம் மென்றும் தீய குலம் மென்றும் என்று கூறுவதெல்லாம்
வெறும் சொல் அளவேயாகும். அப்படி கூறுவதில் ஒரு பொருளும் இல்லை.
அவரவர் தவத்தினாலும், கற்ற கல்வியாலும், ஆள்வினை (முயற்சி செய்யும்
தொழில்களைக் குறிக்கும்) உடைமையாலும்தான் ஒருவருக்கும் ஆகும் குலம்.
இதனையே குறள் மேலும் விரித்து,
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்11
இதன் கருத்து, ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடையக்
கருமமே (செயல், தொழில்) காரணம்.
என்றும் கூறுவதைக் காணலாம்.
இதனால், குறள் காட்டும் தர்மமும், சமுதாயமும், மனுதர்மம் காட்டும் தர்மமும்,
சமுதாயமும் வேறு வேறாம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
----------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:
1. http://www.vedarahasya.net/manu0.htm
2. http://www.tamilpaper.net/?p=877
3. மனுதர்மம் – 5 ஆவது அத்தியாயம், புலால் உண்ண அனுமதி அதிகாரம் – பாடல் - 39
4. திருக்குறள் – 328, 259
5. மனுதர்மம் - உயிர்களின் தோற்ற அதிகாரம் – பாடல் – 31
6. “எம் ஒத்து” – நீலகேசி உரையில் வாமனாசாரியார்
7. திருக்குறள் – 972
8. சீவக சிந்தாமணி – 544
9. மகாபுராணம் – 48ஆவது பர்வம் – பாடல் – 45
10. நாலடியார் – பாடல் – 195
11. திருக்குறள் - 505
Monday, October 24, 2011
திருக்குறளும் மனுதர்மமும்
Labels:
சமணம்,
தமிழ்ச்சமணம்,
திருக்குறள்,
மனுதர்மம்,
ஜைனம்
Wednesday, October 19, 2011
நடுவின்றி நன்பொருள் வெஃகின்
நடுவின்றி நன்பொருள் வெஃகின்
சமண சமயத்திற்கு நல்லறம்1என்றே பெயர். நல்லறம் இரண்டு வகைப்படும்2.
அவை முறையே இல்லறம், துறவறம் எனப்படும். இல்லறம் வடமொழியில்
சிராவகம் என்றும் பாகதத்தில் சாவகம்3 என்றும் அழைக்கப்படுகிறது.இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை அணுவிரதம் என்றும் துறவறத்தார்
கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை மகாவிரதம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அணுவிரதங்கள்4 ஐந்து. அவைகள்,
அணுவிரதம்
1.அகிம்சை (கொல்லாமை)
2.சத்தியம் (பொய்யாமை)
3.அஸ்தேயம் (திருடாமை)
4.பிரம்மசர்யம் (பிறன்மனை நயவாமை)
5.பரிமித பரிக்கிரகம் (நன்பொருள் வெஃகாமை)
சமண இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஐந்து ஒழுக்கங்களின்
கடைசியாகக் கூறப்படுவதுதான் மிகுபொருள் விரும்பாமை5 என்னும்
விரதமாம். அவற்றை ஈண்டு பார்போம்.
மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தில் மிகுபொருள் விரும்பாமை என்னும் விரதத்தைப்
பற்பல சொற்களில் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். நன்பொருள் வெஃகாமை,
பொருள் வரைதல், மிகுபொருள் உவாவாமை போன்றவைகள் அவற்றுள் சில.
மிகுபொருள் விரும்பாமை ஓர் அறமாக, இல்லறத்தார் ஒழுக்கமாக வலியுறுத்தியச்
சமயம் சமணம் தான். சமூகத்தில் ஒருசாராரிடம் மட்டுமே பொருள் சேர்ந்தால்,
சமூகம் சீர்க்குலையும் என்பதனை என்றோ உணர்ந்து ஓர் அறமாக கொள்ளப்பட்டது
மிக சிறப்புடைத்தாம். மிகுதியான பொருள் உடையவர்கள் மற்றவர்களுக்கு
அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த அறம்/ஒழுக்கம் கூறப்பட்டிருக்குமோ
என்று எண்ணத் தோன்றுகிறது6.
ஏனெனில், சமணம் இல்லறத்தாருக்கு நான்கு வகை தானங்களை கடைப்பிடிக்கச்
சொல்கிறது. அவை,
1. அன்னதானம்
2. அடைக்கல தானம்
3. மருத்துவ தானம்
4. கல்வி தானம்
என்பனவாம். இந்த தானங்கள்7, துறவறத்தாரின் தவத்திற்கு இணையாகவும்
சொல்லப்படுகிறது என்பது ஈங்குக் குறிப்பிடத்தக்கது. பெரும் பொருள் படைத்தவர்கள்,
இந்த தானங்களை கொண்டு ஏழைகளுக்கும், இரந்தார்களுக்கும், அனாதைகளுக்கும்
உதவவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
திருக்குறளில் மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் இந்த
விரதம் (மிகுபொருள் விரும்பாமை) சொல்லப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்ப்போம்.
வெஃகாமை8 என்னும் அதிகாரத்தில் மிகுபொருள் விரும்பாமை குறிப்பிடப்பட்டிருக்கிறது!
அக்குறள்,
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் – திருக்குறள் (171)
இக்குறளுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுகிறார்,
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன்
அன்று ‘என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை’ ஒருவன்
வெஃகுமாயின்; குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல்
அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே
அவனுக்குக் கொடுக்கும்.
குடியை வளரச் செய்து பல நன்மையும் பயக்கும் இயல்பு பற்றி, வெஃகின்
என்பார், ‘நன்பொருள் வெஃகின்’ என்றார். பொன்ற என்பது ‘பொன்றி’
எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.
என்றும்,
மணக்குடவர் அதே குறளுக்கு,
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே
குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்
இது சந்தான நாச முண்டாமென்றது.
என்றும் பொருள் செய்திருக்கிறார்.
இங்கே “நன்பொருள்” என்பதுதான் அந்தக் குறளின் குறிச் சொற்றொடர்.
நன்பொருள் என்பதற்கு பெரிய/பெரும் பொருள் என்றும் பொருள்படும்.
எப்படியெனின், நன்றாக மழைப் பொழிந்தது என்றால் பலத்த/பெரும்
மழைப் பெய்தது என்று பொருள் கொள்கிறோம். இன்னுமொரு காட்டுப்
பார்ப்போம். அவன் நன்றாக அடித்துவிட்டான் என்றால் கடுமையாக/பெரிதாக
அடித்துவிட்டான் என்றுப் பொருள் படுவதுபோல், நன்பொருள் என்பதற்கு
மணக்குடவர் கூறுவதுபோல் ”மிக்க பொருள்” என்றுப் பொருள் கொண்டால்
அக்குறள் முழுமைப் பெறும். மேலும் தொல்காப்பியம் “நன்று பெரிதாகும்9”
என்று கூறுவதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்,
பரிமேலழகர் உரை இங்கு சிறப்பில்லை என்பது அங்கை நெல்லிக்கனி.
சமூகத்தில் ஒருசாரார் பேராசையால் பெரும் பணம் சேர்த்துக் கொண்டே போனால்,
நாட்டில் சமூக வாழ்வு நடுவு நிலைமையின்றிக் குன்றிப்போகும், திருட்டு
முதலான குற்றங்கள் பெருகும், ஏழை, எளியோர் இன்னல் கொள்வர்,
வறுமைத் தலைவிரித்தாடும் என்பதால், சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க
சமணம் இல்லறத்தாருக்கு “பொருள் வரைதல்10” என்ற விரதத்தை/ஒழுக்கத்தை
வலியுறுத்துகின்றது.
இரா.பானுகுமார்,
சென்னை
=====================================================
அடிக்குறிப்பு:
1. தொல்அறமே படையாய் உடை அச்சுத நாயகன்தன்
நல்லறம் மேவி இந்நாற்கதி நீக்கிலர் தீக்கதி சேர்ந்து
அல்அறம் மேவுவர் என்(று) அறைத்தாலும் அறிவிலிகள்
புல் அறம் மேவுவர் போகத்தின் மேலுள்ள மோகத்திலே – திருநூற்றந்தாதி (36)
2. இல்லறம் ஏனைத் துறவறம் என்றுஇவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)
3. சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் – சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை(20)
4. அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம் = அருங்கலச் செப்பு (65)
5. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார் பொய்
உரையார் களவினை ஒழுகார் பிறர்மனை
உவவார் மிகுபொருள் உவவார் வெம்
கரையால் உணர்வினை அழியார் அழிதசை
துவ்வார் விடமென வெவ்வாறும்
புரையார் நறவுனை நுகரார் இரவுணல்
புகழார் குரவரை இகழாரே – திருக்கலம்பகம் (67)
6. செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பதுஓர் வைப்பு – அறநெறிச்சாரம் (178)
7. “பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)
8. வெஃகாமை என்பதற்கு பரிமேலழகர் பிறர்க்குரிய பொருளை வெளவக் கருதாமை என்றும் மணக்குடவர் பிறர் பொருளை விரும்பாமை என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். இது பொருத்தமாகயில்லை. பிறர்ப் பொருள் விரும்பாமை என்பதைக் குறிக்க “கள்ளாமை” என்ற தனி அதிகாரம் சொல்லப்பட்டிருக்கும்போது வெஃகாமை என்பதற்கும் பிறர் பொருள் விரும்பாமை என்று பொருள் கொள்வது சிறந்ததாகப்படவில்லை. வெஃகாமை என்பதற்கு பொருள் வரைதல் அஃதாவது மிகுபொருள் வரைதல் என்ற கருத்தில் எடுத்தாண்டால் பொருள் சிறக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
9. "நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46
10. பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச் செப்பு (66)

வெஃகாமை,
ஜைனம்
Saturday, September 03, 2011
சமண சிற்ப விளக்கம்
சமண சிற்ப விளக்கம்
இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண
சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும்
சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே
ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள் முரண்பட்டேயிருந்தன.
அவ்வாறே, ஜைனமும், பெளத்தமும் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும்,
அகத்தே இரண்டும் வேறுப்பட்டேயிருந்தன. தற்போதைய சூழ்நிலையுல் சமணம்,
பெளத்தம் இரண்டும் அருகிவிட்ட நிலையில் புறவயமான சிற்பங்களுக்குள்
வேறுபாடு தெரிந்துக் கொள்வது இன்றியமையாதது. தற்காலத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும் என்ற நோக்கிலும்
எழுதப்படுகிறது.
சமண சிற்ப அம்சங்கள்
பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும்
அவ்வாறே. சமயச் சிற்பங்களும், சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு
என்றால் அதுமிகையாகாது.
இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை
ஆராயும்போது உருவ வழிபாடு என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது.
தற்போதைய சிற்பங்களின் மூலம் பாத வழிபாடேயாகும். தீர்த்தங்கரர்கள்
ஆகட்டும் புத்தர்கள் ஆகட்டும், தங்கள் கொள்கைகளை பரப்ப இந்திய
நிலப்பரப்பு முழுதும் நடந்தே சென்றார்கள். அவற்றின் குறியீடே இந்த
பாத வழிபாடாகும். பின்னர் அவ்வழிபாடு, படிப்படியாக உருவ வழிபாடாக
மாறத் தொடங்கியது.
பார்க்க படம் - பத்ரபாகு முனிவரின் பாதம் - கி.பி.3ஆம் நூற்றாண்டு
அறப்புணைவோர் அல்லது தீர்த்தங்கரர்
சமணத்தில், முதன் முதல் பாத வழிபாடே நடைமுறையிருந்தது. பின்னர்
அறப்புணைவோர் என்று அழைக்கப்படும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை
அமைக்கத் தொடங்கினர். தீர்த்தங்கரர் நம்மை போல் மனிதர்களாகப் பிறந்து,
தங்கள் விடாமுயற்சியின் மூலம் பற்றுக்கோடுகளை களைந்து சிவகதியடைந்து
இறைவர்களாக திகழ்ந்தவர்கள்.ஆதலால், சமண சிற்பங்களை அமைக்கும்போது
மனித மாதிரியாகவே அமைத்தார்கள். இந்த வகையில் மற்ற சமய இறைவர்
சிற்பங்களிலிருந்து சமண சிற்பங்கள் வேறுபடுவதைக் காணலாம். (சிவனார்,
விஷ்ணு ஆகியோருக்கு நான்கு கைகள் இருப்பதுபோல சிற்பங்களை
அமைப்பதை ஒப்புநோக்குக)
பின்னர், அறப்புணைவோரின் காவலர்களான யட்சன், யட்சி முதலியானோர்
சிற்பங்களையும் சிற்பங்களாக வடிக்கத் தொடங்கினர். அறப்புணைவோர்
சிற்பங்கள் இரண்டு விதமாக நிலைகளில் அமைப்பார்கள். ஒன்று நின்றக்
கோலத்திலும் (கயோத்சர்கம்), மற்றொன்று அமர்ந்தக் கோலத்திலும்
(பத்மாசனம்) இருக்கும்.
பார்க்க படம் - பார்ஸவநாதர் - பத்மாவதி
பத்மாசனமும் அர்த பத்மாசனமும்
தென்னாட்டில் அமைக்கப்படும் அறப்புணைவோர் சிற்பங்களில் பெரும்பாலும்
அர்த பத்மாசனத்தில் காட்டப்பட்டிருக்கும். அர்த பத்மாசனம் என்றால் பாதி
பத்மாசனம். வடநாட்டில் பெருவாரியான இடங்களில் பத்மாசன (யோகாசனம்)
நிலையில் காட்டப்பட்டிருக்கும். தென்னாட்டில் சமண சிற்பம் ஆடை ஏதும்
இல்லாமல் காட்டப்பட்டிருக்கும். (உற்றாற்கு உடம்பும் மிகை எனும்போது
ஆடை எதற்கு! அணியாத அழகன் இவனென்ப!!)
சமணங்கால் அல்லது சப்பளாங்கால்
சப்பளாங்கால் என்ற சொல்லை நாம் கேட்டிருப்போம். கிராமங்களில் இன்றும்
பயன்படுத்தும் சொல்வழக்கிது. தரையில் அமர்ந்திருக்கும் கோலத்திற்கு
சப்பளாங்கால் என்கிறோம். அது சமணங்கால் என்பதின் திரிபேயாகும்.
சமணர்கள் அமர்ந்து தியானம் செய்வதை பார்த்த மக்கள் அவ்வமர்ந்த
நிலைக்கு சமண+கால்=சமணங்கால் என்று அழைக்கலானார்கள். இந்த
சொல் பரவலாகத் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம்.
தமிழர்களிடம் சமணர் தாக்கத்தை இது காட்டுவனவாக திகழ்கிறது இச்சொல்.
சிற்ப குறியீடுகள்
அக்காலத்தில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு மன்னனை (தலைவன்) நோக்கி
இருந்ததுபோல, அரசர்களாகவும், சக்கரவர்த்திகளாக திகழ்ந்த அறப்புணைவோர்
சிற்பங்களை அமைக்கும்போது அரசனின் குறியீடுகளான, சாமரம், குடை,
சிம்மாசனம், சிம்மாசனத்தில் சாய்ந்துக் கொள்ள பயன்படும் திண்டு ஆகியவற்றை அமைத்திருக்கிறார்கள். அக்குறியீடுகள் அறப்புணைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிப்பலிப்பதாக கொள்ளலாம்.
எண்வகை சிறப்புகள்
அறப்புணைவோர் (தீர்த்தங்கரர்) வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை ”பஞ்ச
கலியாணங்கள்” என்று பெயரிட்டு அழைப்பார்கள். அவை முறையே,
1.கர்ப்பாவதரண கல்யாணம்,
2.ஜன்மபிஷேக கல்யாணம்,
3.தீட்சாக் கல்யாணம்,
4.கேவலாற்பத்தி கல்யாணம்
5.பரிநிர்வாணக் கல்யாணம்
என்பன. இவற்றில் கேவலாற்பத்தி கலியாணம் என்பது அறப்புணைவோர்களுக்கு
கேவல ஞானம் (வாலறிவு – தூய அறிவு) ஏற்படும்போது கொண்டாடப்படுகிறது.
அவ்வமயம், அமரர் உலக அரசனான தேவேந்திரன் அறப்புணைவோர் அடிதாழ்ந்து
”சமவசரணம்” என்னும் கோயிலை(கோட்டம்/திருமணிக் கோயில்) அமைப்பான்.
பார்க்க படம் - சமவசரண படம்
(இச்சமவசரணத்தை நினைவிற் கொள்ளும் வகையில் மானிடர்கள் தீர்த்தங்கரர்களின்
கோயில்களை அமைத்து வழிபாடு செய்கிறார்கள்)
அறப்புணைவோர் அச்சமவசரணத்தில் எழுந்தருளும்போது பகவானிடத்து எண்வகைச்
சிறப்புகள் தோன்றும்.
அவைகள் பின்வருமாறு:
1. அசோக மரம் அல்லது பிண்டி மரம்
2. தேவர் மலர்ப் பொழிவு அல்லது புஷ்பவிருஷ்டி
3. திவ்யத்தொனி
4. சாமரம் வீசுவோர்
5. சிம்மாசனம் அல்லது அரியாசனம்
6. தேவ துந்துபி ஒலி
7. ஒளி மண்டலம்
8. முக்குடை
பார்க்க படம் - சமண சிற்ப விளக்கப் படம்
இந்த எண்வகைச் சிறப்பை கீழே வரும் பாடல் அழகாகக் கூறுகிறது.
“சுடர்மண் டலஞ்சுர துந்துபி தெய்வத் துவனிசிங்கப்
பிடர்மண் டலவணை பிண்டிவெண் சாமரை பெய்மலரி
னடர்மண் டலமழை யம்பொற் குடைமும்மை யாமடியோ
மிடர்மண் டலம்கெடுப் பார்க்கிமை யார்செயு மென்சிறப்பே”
(இதில் திவ்யதொனியும், தேவ துந்துபியின் ஒலி ஆகியவைச் சிற்பங்களில்
காட்டமுடியாது)
1.அசோக மரம் அல்லது பிண்டி மரம்
இதில் இரண்டு தீர்த்தங்கரர்கள் தவிர ஏனையோர் அசோக மரத்தின் கீழே ஞானம்
பெற்றதால் அதன் குறியீடாக அசோகமரம் சிற்பங்களில் காட்டப்படும்.
(மற்ற இருவருக்கு அரசமரம் காட்டப்படும். ஆனால் சிற்பங்களில் அவ்வித்தியாசம்
காட்டமுடியாது).
சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”
என்று இளங்கோவடிகள் வாழ்த்தில், முக்குடையும், பிண்டியும் குறித்திருப்பதைக்
காணலாம்.
2.தேவர் மலர்ப் பொழிவு
பகவான் வாலறிவு பெற்று, சமவசரணத்தில் எழுந்தருளும் போது தேவர்கள்
மலர்மாரிப் பொழிவார்கள். இதனை குறிக்க புஷபவிருஷ்டி என்னும் மலர்ப்
பொழிவுக் காட்டப்படுகிறது.
திருப்பாமாலை - பஞ்ச குருபக்தி – பாடல் எண்.1-10
“ஒருபெருங் கேவலத் துலகம் மூன்றும்
பொருவற உணர்ந்த புண்ணிய ராகிப்
பேரொளி மண்டிலம் பெரிதினிது விளங்க
அரிசுமந் தேத்திய அணி ஆசனத்துப்
பொங்கு சாமரை புடைநின் றிரட்ட
எங்குந் துந்துபி அந்தரத் தியம்ப
மருவிய பூமழை வானோர் சொரிதர
எரிதளிர்ப் பிண்டி யின்னிழன் மேவி
இலங்கொளி முக்குடை இயல்பெற நிழற்றக்
கலங்கிய இருவினைக் கடிபடை உடையப்”
3.திவ்யதொனி
தேவேந்திரன் அமைக்கும் சமவசரணத்தில் மன்னுயிர்கள் (மானிடர்கள்,
மிருகங்கள்,பறவைகள்) மட்டுமல்ல வானுலகத்திலுள்ள நான்கு வகைத்
தேவர்களும் பகவான் அறம் கேட்க வருவார்கள். பகவான் திருவாய்
மலர்ந்தருளுவார். (அவருடைய வாய் அசையாது, ஆனால் அவர் திருவாய்
பொழியானது அனைத்து மிருக, பறவை உயரிகளுக்கும் தத்தம் மொழிகளிலும்,
மானிடர்களுக்கு அவரவர் மொழிகளில் (18 மொழிகள்) கேட்கும். இவற்றை
திவ்யதொனி என்பார்கள். தமிழில் “திருவாய் மொழி” என்றும் ”திருமொழி”
என்றும் அழைக்கப்படும்.
திருநூற்றந்தாதி – பாடல்:52
கதமொழி தீர்முன் கறுவுக டேய்மின் கருணைநெஞ்சோ
டிதமொழி கூறுமி னின்னுயி ரோம்புமி னெப்போழுதுஞ்
சுதமொழி கேண்மின் சுகமிக வேண்டிற் றுறவர்சொன்ன
வதமொழி யேன்மி னிவைசிந னார்திரு வாய்மொழியே”
4.சாமரம்
அரசருக்கு இரண்டு பக்கமும் சாமரம் வீசுவோர் இருப்பது போன்றே அரச வம்சமான தீர்த்தங்கரர்களுக்கும் தேவர் சாமரம் வீசுவதாக குறியீடு அமைத்திருப்பர்.
5.சிம்மாசனம் அல்லது அரியாசனம்
அரசர்கள் சிம்மாசனத்தில் அமருவதுபோல தீர்த்தங்கர சிற்பங்களிலும் சிம்மாசனம்
குறியீடாகக் காட்டப்பட்டிருக்கும். தீர்த்தங்கரர் சிலைகளில் கீழ் காட்டப்படும் சிங்க
முகங்களை வைத்து அது வர்த்தமான மகாவீரர் இலாஞ்சனம் (சின்னம்) என்றும்
அந்தச் சிற்பம் அவரின் சிற்பவடிவம் என்று கருதுகிறார்கள். இது தவறு. எல்லா
தீர்த்தங்கரர் சிலைகளிலும் சிங்க முகங்கொண்ட ஆசனங்கள் (சிம்மாசனம்)
அமைக்கப்பட்டிருக்கும்.
இங்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், தீர்த்தங்கர பகவான் அமர்ந்த
கோலத்தில் சிலை அமைக்கும்போது அரியாசனத்திலும், நின்ற கோலத்தில்
தாமரை மலரில் நிற்பது போலவும் காட்டப்படும்)
6.தேவ துந்தூபி ஒலி
சமவசரணத்தில் பகவான் எழுந்தருளும்போது தேவர்கள் துந்துபி என்ற
வாத்தியத்தை முழங்கும்போது ஏற்படும் ஒலி. இவற்றை சிற்பங்களில்
காட்டமுடியாது.
7.ஒளி மண்டலம்
இஃது எல்லா சமய சிற்பங்களிலும் காட்டப்படுவதுதான். தென்னக சமண
சிற்பங்களில் இப்பிரபாவளி நீள்வட்டத்தில் காட்டப்பட்டிருக்கும். வடநாட்டு
சமண சிற்பங்களில் அவை முழுவட்டவடிவில் காட்டப்பட்டிருக்கும்.
8.முக்குடை
அரசர்கள் அமரும் அரியாசனத்தின் மேல் ஒரு குடையிருக்கும். எல்லா
தேசங்களையும் அரசர்கள் வெற்றிக் கொண்டாலும் மற்ற உலகங்களை
வெற்றிக் கொள்ள முடியாது என்பதால் ஒரு குடை மட்டும் இருக்கும்.
ஆனால், அறப்புணைவோர்கள் தங்கள் கேவல ஞானத்தால் மூன்று
உலகங்களையும் (மேல்,நடு மற்றும் கீழ்) வென்றவர்கள் என்பதால்
குறியீடாக மூன்று குடைகள் காட்டப்பட்டிருக்கும்.
(முக்குடை முறையே சந்திராதித்தம், நித்திய விநோதம், சகலபாசனம்
என்று அழைக்கப்படும்)
இரா.பானுகுமார்,
சென்னை
(இக்கட்டுரை த.ம.அ
விற்காக எழுதப்பட்டது)
Sunday, July 10, 2011
குறளும் நிகண்டுகளும்
குறளும் நிகண்டுகளும்
இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு
வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்”
என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள்
மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன.
பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு
சொல் கால வர்த்தமானங்களில் வெவ்வேறு பொருள்களை
கொண்டு வழங்குதல் கண்கூடு. ஆயின், நிகண்டுகள் அவற்றைத்
தொகுத்துவதுமல்லாமல் அவற்றை பின்னைத் தலைமுறையினருக்குப்
பதிவுச் செய்யும் காலக்கண்ணாடிகள் என்றால் மிகையாகாது.
தமிழ் நிகண்டுகள்
தமிழ் நிகண்டுகளின் தொடக்க காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு1
என்று அறிஞர்கள் கூறுவர். நிறைய தமிழ் நிகண்டுகள் இருந்தாலும்,
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி ஆகியவை மிக
முக்கியமானதாகக் கருதப் பட்டுவருகிறது. இவற்றில் திவாகரம்
காலத்தால் முந்தையது. இதனையொட்டியக் காலத்தில் எழுந்தது
பிங்கல நிகண்டு என்னும் பிங்கலாந்தை. சூடாமணி நிகண்டுக்
காலத்தால் மிக பிந்தையது. எனினும், மற்றைய எல்லா
நிகண்டுகளிலும் மிகப் பிரபலமானது இதுவேயாம். இதன்
காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு2 என்பர்.
திருக்குறள் கடவுள் வாழ்த்து
குறளாசிரியர் தேவர் பெருமான், கடவுள் வாழ்த்தில் தான்
வழிப்படும் இறைவனைப் போற்றி வணங்கியிருக்கிறார். அவர்
எந்த இறைவனை வணங்கியிருக்கிறார் என்பதை, இங்கு
நிகண்டுகள் மூலம் ஆராய்ந்து, ஒப்பு நோக்குவோம். பின்னர்,
அந்நிகண்டுகள் அவ்வாறு கூறுவதற்கு இலக்கியத் தரவுகள்
உள்ளனவா என்றும் பார்ப்போம்.
குறளாசிரியர், தான் வழிப்படும் இறைவனை கீழ் வரும்
சொற்களைக் கொண்டு குறித்திருக்கிறார். (மணக்குடவர் வரிசைப்படி)
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. தனக்குவமை இல்லாதான்
5. அறவாழி அந்தணன்
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
7. இருவினையும் சேரா இறைவன்
8. பொறிவாயில் ஐந்தவித்தான்
9. இறைவன்
10. எண்குணத்தான்
கடவுள் வாழ்த்து - நிகண்டுகள் – ஒப்புநோக்கு
எல்லா நிகண்டுகளையும் ஒப்பு நோக்குவது இயலாதது. ஏனெனில்,
சில நிகண்டுகள் காலத்தால் மிக, மிக பிந்தியவை. மேலும்,
அந்நிகண்டுகளில் முக்கிய தெய்வங்களைக் குறிக்கவில்லை.
குறிப்பாக, நாமதீப நிகண்டில் அருகன் நாமங்கள் (பெயர்)
குறிக்கப்படவில்லை. இதனான், முக்கிய, சிறந்த நிகண்டுகளான
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி மற்றும் கயாதரம் முதலிய
நிகண்டுகளை மட்டும் இங்கு ஒப்பாய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேலே காட்டப்பட்ட அட்டவணையில் இருந்து, சில சொற்கள் சிவன்,
விஷ்ணு, அருகன், புத்தன் ஆகியோருக்கு பொதுவாக வழங்கப்பட்டிருப்பது
தெரியவரும். எனினும், பல குறள் சொற்றொடர்கள் அருகனுக்கு
மட்டும் சிறப்பாகக் குறிக்கப்பட்டிருப்பதும் காண்க.
எந்த ஒரு நூலாசிரியரும் தான் சார்ந்த சமயக் கடவுளர்களை
வணங்குவார்களேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும்,
மற்ற பாடல்களில் பிற சமயக் கடவுளர்களை வணங்குவதுத்
தொன்று மரபில்லை. இம்மரபின் அடிப்படையில் மேலேக்
காட்டப்பட்ட அட்டவணையை நோக்க, குறளாசிரியர் உள்ளத்தை
எளிதில் புரிந்துக் கொள்ளலாம். என்னை? :-)
இலக்கியச் சான்றுகள்
1.ஆதிபகவன்
“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்
“ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை
“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு
2. வாலறிவன்
கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்
இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை
அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்
உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி
பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)
3. மலர்மிசை ஏகினான்
“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது”
– சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை -(200 - 205)
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” – சூளாமணி - 187
“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 188
“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 189
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” – அறநெறிச் சாரம் - 1
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ!
நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” – திருப்பாமாலை - (1-5)
“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே” - திருக்கலம்பகம்
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - திருக்கலம்பகம் - 74
“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - தோத்திரத் திரட்டு - 6
“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” – தோத்திரத் திரட்டு - 11
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” – திருஇரட்டைமணி மாலை - 1
4. தனக்குவமை இல்லாதான்
(இச்சொற்றொடர் தமிழ்ச் சமண இலக்கியங்களில் குறித்திருக்கிறது. தற்போது என்
நினைவில் இல்லை. பின்னர் நூலறிந்து எழுதுகிறேன். வடமொழித் தரவுகளும்
கொடுக்க முடியும்.
5. அறவாழி அந்தணன்
“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே”
- திருநூற்றந்தாதி - 27
“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி - 1611
“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் - 25
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரனடி
பூண்டு கிடந்தால் புறத்திருந்த வெங்கூற்றம் போகும் போலும்
– திருக்கலம்பகம் – 58
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்பதிகாரம் (10:168-169)
பன்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தொன்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
– சீவக சிந்தாமணி – 3
உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீயிலையேல்
– மேருமந்தரப் புராணம் – 128
7. இருவினையும் சேரா இறைவன்
“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”
– யசோதர காவியம் – 300
”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………” – ஜீவசம்போதனை – 27
8.பொறிவாயில் ஐந்தவித்தான்
பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே – ஜீவசம்போதனை – 1:29)
ஐவரை வென்றோன் அடியினை – சிலப்பதிகாரம் – 10:198)
பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வன் – சீவக சிந்தாமணி – 2563
பொறியிலா அறிவன் நீ – மேருமந்தர புராணம் – 1000
9. இறைவன்
கண்ணி னாலொன்றுங் காணாய் காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய் பிரிதலில் பேரின்ப முடையை
யுண்ணல் யாவது மிலையா யொளிதிக ழுருவமஃ துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா
– நீலகேசி - (159)
"கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்ப
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை
அடைவிலா ஆயுஇன்மை அந்தராயங்கள் இன்மை
உடையவன் யாவன் மற்று இவ்வுலகினுக்கு இறைவனாமே"
– சூடாமணி நிகண்டு (1)
குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை – அருங்கலச் செப்பு (1)
நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும்
செல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி – நீலகேசி – 1
10. எண்குணத்தான்
பண்ணவன் எண்குணன் – சிலப்பதிகாரம் – (10:188)
எண் குணனும் கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469
“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)
பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12
எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3
ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.
கல்வெட்டுப் பாடல்:
“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”
ஒவ்வொரு சொற்களுக்கும் குறைந்தது பத்து எடுத்துக்காட்டுகள்
கொடுக்க முடியும், விரிவஞ்சி கொடுக்கப்படவில்லை.
முடிபு:
இதுகாறும், பார்த்தத் தரவுகளின் மூலமும், நிகண்டுகளின்
தரவுகளின் அடிப்படையிலும் தேவர் பெருமான் உள்ளங்கவர்
இறைவன் அருகனேயாவார் என்பது அங்கை நெல்லிக்கனி!
இரா.பானுகுமார்,
சென்னை
அடிக்குறிப்பு:
(குறிப்பு: * எண்குணன் – பிங்கல நிகண்டு சில ஏடுகளில் தான்
சிவனுக்கு எண்குணத்தான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு பாடல்களை திருத்தி பதிக்க
முயன்ற வரலாறும் இங்கு நினைக்கத்தக்கது.)
1. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.134)
2. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.15)

Subscribe to:
Posts (Atom)